Monday, February 21, 2011

காப்பாற்றும் தாழ்ப்பாள்!

தினமும் செய்திதாளைப் பார்த்தால் குறைந்தது ஒரு திருட்டு செய்தியோ அல்லது திருடனைப் பற்றி செய்தியோ வந்திருக்கும். அதைப் படித்ததும் எங்கே நமக்கும் அது போல் அனுபவம் (அதாவது நம் உடைமைக்கும் அது போல் திருட்டு) நடந்திடுமோன்ற பயத்தில் கொஞ்ச நாளைக்கு நம்ம நிம்மதி திருட்டு போய்டும் :( அதுவும் நம் கற்பனை குதிரைக்கு கேட்கவே வேண்டாம்... வீட்டில் தனியா இருக்கும்போது ஒரு சின்ன சத்தம் கேட்டுச்சு...அவ்வளவுதான்... அந்த மாதிரி சமயங்கள்ல கொஞ்சம் தைரியத்தை வரவழச்சுட்டு எல்லா அறைகளையும் செக் பண்ணிட்டு நேரா போனை எடுத்து (தெரிஞ்சவங்க) யாருக்காவது ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன் ;)... பயம் பறந்துடும்... நாலு நல்ல விஷயங்களை அவங்களோட பகிர்ந்திட்ட மாதிரியும் இருக்கும் ;)

எல்லாரும்
நல்லாருக்கணும்!!
 சில நாட்களுக்கு முன் நாளிதழில் வாசகர் கடிதத்தில் ஒருவர் தன் வீட்டில் நடந்த நூதன திருட்டைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய மனைவி காலை 9 மணிக்கு வீட்டில் தனியே இருந்திருக்கிறார். நல்லா தூங்கிட்டு... தூக்கத்திலயும் அந்த அம்மா கொஞ்ச உஷாராத்தான் இருப்பாங்க போலிருக்கு... வீட்டில் யாரோ நடமாடுற சத்தம் கேட்டு முழிச்சிருக்காங்க... ஒரு ஆள் அவங்க இருந்த அறைக்கு எதிர் ஆறைக்குள்ள நுழையறத பார்த்திருக்காங்க... அப்பா... எனக்கு வாசிக்க வாசிக்க பக் பக்குனு ஆயிடுச்சு... அப்ப உங்களுக்கு?

அவங்க நல்ல நேரம் திருடன் அவங்க அறைக்குள்ள நுழையாம அவங்க குழந்தைகள் அறைக்குள் போயிருக்கான். அத பார்த்ததும் இந்த அம்மா தன் அறையைப் பூட்டிட்டு அவங்க பக்கத்தில இருந்த போனில் அவங்க கணவருக்கு விஷயத்த மெல்ல சொல்லியிருக்காங்க... அவர் உடனே போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காங்க... அதுக்கப்புறம் இந்தம்மா சத்தம் போட்டாங்கன்னும் தன் கடிதத்தில் எழுதியிருந்தார். திருடனைப் பிடித்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

திருடன் வீட்டு லாக்கை உடைத்துவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி சமயத்தில் அந்த அம்மா அறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் இருந்ததே கொஞ்சம் ஆபத்தானதுதான். வீட்டு லாக்கையே உடைத்தவனுக்கு அறையின் லாக்கை உடைக்க வெகு நேரம் ஆகாது.  அவன் அறியாதபடி அவர் வெளியே சென்றிருக்க வேண்டும்.

பில்டிங் செக்யூரிட்டியின் கவனக்குறைபாடுதான் இதில் முதல் தவறு. புதியதாக ஒருவர் கட்டிடத்தில் நுழையும்போது அவனைக் கொஞ்சம் விசாரித்திருந்தால் அவன் வந்த வழியே சென்றிருப்பான்.

வாசகர் குறிப்பிட்டிருந்த காரணமும் கவனத்தில் வைக்க வேண்டிய ஒன்றுதான். அதாவது அவருடைய வீட்டில் டீவி சத்தமோ மற்ற பேச்சு சத்தமோ கேட்காததும் ஆளில்லாத வீடு என நினைத்து திருடனை வீட்டில் நுழையச் செய்திருக்கலாம்.

அனுபவம் தந்த பாடத்தில் அவர் தந்த தீர்வும் நல்லதாகப் படுகிறது. அதாவது வீட்டு கதவு லாக் தவிர்த்து ஒரு தாழ்ப்பாளும் வைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை என்றிருந்தார்.

ஆனால் இதிலும் என் மூளைக்கு ரெண்டு குறை தோணுது : (
1. அலுவலகம்/பள்ளி முடிந்து வரும் கணவர்/குழந்தையிடம் சாவி இருந்தாலும் வீட்டினுள் இருப்பவர் போய் கதவைத் திறக்கும் வரை அவர் வெளியே காத்திருக்க வேண்டும்.
2. தாழ்ப்பாள் போட்ட சமயத்தில் வீட்டினுள் தனியாக இருப்பவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் வெளியே இருந்து யாரும் காப்பாற்ற சிறிது சமயமெடுக்கும்.

என்ன பண்றது... கொலை, கொள்ளை போன்ற பெரிய இழப்புகளைத் தவிர்க்க இது போன்ற சின்ன சின்ன அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதெல்லாம் சரி...வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோடு வெளியூர் போகும்போது என்ன பண்றதுன்னு தானே நினைக்கிறீங்க... வேறு வழியில்லை... வீட்டிலிருக்கும் நகை,பணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டு செல்வதைத் தவிர வேறு ஒண்ணும் செய்ய முடியாது :(

என் சந்தேகம் தான் தீர்ந்த பாடில்லை. வீட்டு லாக்கை உடைக்கும் வரை அவன் யார் கண்ணிலும் படவேயில்லையா/யாருக்கும் கேட்கவேயில்லையா? :(

இந்த கடிதத்தைப் படித்ததும் செய்திதாளில் முன்பு படித்த மற்றொரு சம்பவமும் ஞாபகம் வந்துச்சு. பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வீட்டு லாக் உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் உஷாராகி மெதுவாக வீட்டினுள் எட்டிப் பார்த்தால் ஒரு பெண் அவர் அறையிலிருந்த பீரோவை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். இவர் கொஞ்சமும் பயப்படாமல் அவளின் பின்னே சென்று அந்த பெண்ணைக் கையும் களவுமாக பிடித்திருக்கிறார். அந்த தைரியசாலியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். நல்ல குண்டுகுண்டுன்னு இருந்தார். கொஞ்சம் நோஞ்சானாக இருந்திருந்தால் திருடி இவரைத் தாக்கியிருக்கலாம். குண்டா இருக்கிறதிலயும் ஒரு நன்மை இருக்கு ;)

எங்கள் வீட்டிலும் இந்த தாழ்ப்பாள் உண்டு... ஒரு முறை வீட்டில் தனியாக இருந்த சமயம் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஏற்கனவே பூட்டியிருந்த தாழ்ப்பாளை நன்றாக பூட்டிவிட்டு 'யாரது?' என்று கேட்டேன் (நாங்கள்லாம் படு உஷாருல்ல:) ) பதிலில்லை... இரண்டு மூன்று முறை கேட்டும் தட்டுவதைத் தவிர பதில் சொல்லவில்லை... நீங்க நினைக்கலாம்...லென்ஸ் வழியா பார்க்கலாமேஏன்னு... எங்க வீட்டுக் கதவுக்கு லென்ஸ் கிடையாது... ஹி..ஹி..ஒரு வேளை தமிழ் தெரியாத திருடனாயிருக்குமோ:( 'who's this' என்று கேட்டேன்.. 'it's me' என்றாள் கீழ் வீட்டிலிருக்கும், எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும், அரபிச் சிறுமி...;)

Monday, February 14, 2011

கேள்விக்கென்ன பதில்?!

என் மகன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக்கிட்டு இருப்பான்னும் அதுக்கு சான்றா ரெண்டே ரென்டே கேள்விகளையும் தான் பதிவில் சொல்லியிருந்தேன்... மக்கா .... நீங்கள்லாம் என்ன நினைச்சீங்களோ...அதும் ரஜின் நல்லா அனுபவிங்கன்னு வேற சொல்லியிருந்தார்... இதெல்லாம் என் மகன் காதில் விழுந்துடுச்சோ என்னன்னு தெரியலை... அந்த பதிவை போட்ட அடுத்த வாரமே ஒரு நாளில் என்னை கேள்வி கேட்டு துளைச்சுட்டான்... நான் இந்த கேள்விகளை அவனிடமிருந்து எதிர்பார்த்தது தான்..ஆனால் அதுக்கு இன்னும் சில வருடங்கள் போகும்னும் சுலபமா அவனுக்கு புரியவச்சிடலாம்னும் ஒரு நம்பிக்கையோடு இருந்தேன்... ஆனா அவன் இப்பவே இந்த அஞ்சு வயசுலயே ... கேட்டுட்டான்யா... கேட்டுட்டான்யா :(

ம்மா... அல்லாஹ் கேர்ளா (girl) பாயா(boy)? (நான் அவனுக்கு அல்லாஹ்வை ஒருமையில் அல்லாது அவங்க,இவங்கன்னு பன்மையில் அறிமுகப்படுத்தி இருந்ததுதான் அவனுடைய இந்த சந்தேகத்துக்கு காரணமாயிடுச்சு :(  )

அல்லாஹ் கேர்ளும் கிடையாது... பாயும் கிடையாது... நம்மளைத்தான் அல்லாஹ் ஆண் பெண்ணா வச்சிருக்காங்க...

அல்லாஹ் மேலயிருந்து பாக்கிறாங்கன்னு சொன்னியே, பில்டிங் மேலயா இருப்பாங்க...

(என்னே ஒரு கற்பனை..அவ்வ்வ்.)இல்லமா... ஸ்கைல இருந்து பார்ப்பாங்க..அப்பதானே எல்லாரையும் பார்க்க முடியும்?!

அப்ப ஸ்கையிலயிருந்து கீழ விழுந்துட மாட்டாங்களா?

இல்ல..சேர் போட்டு உக்காந்திருப்பாங்க...

சேரை கயிறு போட்டு கட்டியிருப்பாங்களா?

(அவ்வ்வ்..) ஆமா...

அப்ப நாம ஸ்கைக்கு போகணும்னா ஏணி போட்டா ஏறிடலாமா?

இல்லமா.. ஏணி போட்டாலும் ஸ்கை எட்டாது...ரொம்ப தூரத்தில இருக்கு.

அப்ப எப்டி போறது...?

நாமல்லாம் தாத்தா,பாட்டி ஆனதுக்கப்புறம் அல்லாஹ் நம்மளை எடுத்துப்பாங்க...

எப்டி எடுப்பாங்க..அல்லாஹ்க்கு பெரிய கையா?

(ம்ம்...என்ன சொல்றது..முழிக்கிறேன்)

அல்லாஹ்க்கு பெரிய கையா?

அது வந்து...அல்லாஹ்கிட்ட நிறைய பேர் இருக்காங்க..அவங்க பேர் மலக்குகள்..அல்லாஹ் அவங்ககிட்ட யாரை எடுக்க சொல்றானோ அவங்க இங்க வந்து அவங்களை எடுத்துட்டு அல்லாஹ்கிட்ட போய்டுவாங்க...

எப்டி?

அது தெரியலை..அல்லாஹ்வுக்குத் தான் தெரியும்.

சரி..ஸ்கைல என்ன இருக்கும்?

எல்லாம் இருக்கும்..

பெரிய ரைட்டிங் போர்டு, ஸ்கெட்ச் எல்லாம் இருக்குமா?

நீ இப்ப சின்ன பையனா இருக்கிறதுனால இதெல்லாம் உனக்கு பிடிச்சிருக்கு...ஆனா ஸ்கைக்குப் போகும்போது நீ தாத்தா ஆகிடுவல்ல..அப்ப உனக்கு என்ன தேவையோ அதெல்லாம் ஸ்கைல அல்லாஹ் வச்சிருப்பாங்க...

அப்ப டீவியெல்லாம் இருக்குமா...

இங்க நமக்கு போரடிக்குது...அதனால டீவி கொஞ்ச நேரம் பார்க்கிறோம்..ஸ்கைல எப்பவும் நாம் தொழுதுட்டு ஓதிட்டு தான் இருப்போம்...அதனால் டீவியெல்லாம் இருக்காது.

அப்ப நான் மட்டும் தனியாவா போகணும்? (லேசா விசும்பல்)

நீ ஸ்கைக்கு வரும்போது நானும் வாப்பாவும் அங்க இருப்போம்... (ஆமீன்)

அப்ப சரி. ஸ்கைல வேற என்ன இருக்கும்?

நாம இப்ப நல்ல தொழுது ஓதிட்டு இருந்தா அல்லாஹ் நமக்காக ஸ்கைல வீடு தருவாங்க...

அது பெரிய வீடா இருக்குமா? மாடி இருக்குமா? பன்க் பெட்டெல்லாம்(bunk bed) இருக்குமா?

ஆமா எல்லாம் இருக்கும். நமக்கு என்ன வேணுமோ நாம அல்லாஹ்கிட்ட கேட்டா உடனே தருவாங்க.

அப்ப நாம இங்கிருந்து ஒண்ணும் கொண்டு போக வேண்டாமா?

(அவ்வ்)வேண்டாம்... எல்லாமே அங்க புதுசா இருக்கும். அங்க தூசி கிடையாது. மழை, வெயில் கிடையாது...அதனால அங்க எல்லாமே புதுசா இருக்கும். நமக்கு என்ன வேணுமோ அத சாப்பிடலாம். எல்லாமே அங்க சூப்பர் டேஸ்டா இருக்கும்.

ம்ம்ம்...

அல்லாஹ் நமக்கு இதெல்லாம் செய்யணும்னா நாம நல்லா தொழணும்..ஓதணும்..நல்ல பிள்ளையா இருக்கணும்..(சைடு கேப்பில் ஒரு பிட்டு போட்டாச்சு)

ம்ம்...

இதுக்கெல்லாம் தான் நான் உன்கிட்ட எப்பவும் ஓதணும்,தொழணும்னு சொல்றேன். நீ நல்லா தொழுவியாம்மா?

ம்ம்ம்..(அப்புறம் என்னால் முடிஞ்ச அளவு பிட்டு போட்டாச்சு... அல்லாஹ்வால் முடியாதது எதுவுமே இல்லைன்னு என்னால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு புரிய வச்சேன்.சரி..சரின்னு தலையாட்டிட்டு இருந்தான்.).
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ராத்திரி தூக்கத்தில் என்னவோ சொன்னான்.

என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

(என்ன..அல்லாஹ்வா?அல்லாஹ்வையா சொல்றான். ஆஹா பிள்ளை தூக்கத்தில கூட அல்லாஹ்வைப் பத்தி நினைக்கிறானேன்னு பெருமை பிடிபடலை எனக்கு)என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

அல்லாஹ் என்ன முடிச்சாங்க?

அல்லாஹ் ஏம்மா ஹோம்வொர்க் முடிச்சாங்க?

(அவ்வ்... எனக்கு அழறதா சிரிக்கிறதானு தெரியலை. அல்லாஹ்வைப் பத்தி அவனுக்கு புரியுற மாதிரி நான் சொல்லலையோ...இல்ல நான் சொன்னதை அவன் வயசுக்கு ஏத்த மாதிரி அவன் புரிஞ்சிக்கிட்டானா..அவன் பெரியவனாகும்போது நான் சொன்னதை சரியா புரிஞ்சிக்குவானா? ஹ்..ம்...யா அல்லாஹ்...உதவி செய்.

இப்பவும் அப்பப்ப அல்லாஹ்வைப் பற்றி ஏதாவது அவனுக்கு தோணினதைக் கேட்டுட்டு இருக்கிறான்..இங்கு ஸ்கை என்று அவனுக்கு நான் சொல்லியிருப்பது சொர்க்கம் ஒன்றைத்தான்... அவனுக்கு நரகத்தை இன்னும் சிறிது நாள் கழித்து அறிமுகப்படுத்தலாம்னு நினச்சிருக்கேன்.இப்போதைக்கு நல்ல பிள்ளையா இருந்தா அல்லாஹ் நமக்கு உதவி செய்வாங்கன்னும் சேட்டை பண்ணினா பூச்சாண்டி வந்து பிடிச்சுட்டு போய்டுவாங்கன்னும் சொல்லி வச்சிருகேன்... இது எவ்வளவு நாள் ஓடுதோ ஓடட்டும். ;)  இன்ஷா அல்லாஹ் என் மகன் பெரியவனாகும்போது இதைப் படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை .

Monday, February 7, 2011

கேட்டதும் கிடைத்ததும்

ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த போர் பொருட்களை மிக அதிகமாக இஸ்லாத்தில் இணைவதற்காகவும், இஸ்லாத்தில் இணைந்த புதிய முஸ்லிம்களுமான குரைஷி மக்களுக்கு சூரத்து தவ்பாவின் 60வது வசனத்திற்கு ஒப்ப அல்லாஹுடைய தூதர் அவர்கள் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்சாரிகளுக்கு 4 ஒட்டகங்கள் அல்லது அதற்கு சமமான ஆடுகள் கொடுக்கப்பட்டன. இதனால் அன்சாரி ஸஹாபிகள் மிகுந்த மன வேதனையடைந்தார்கள். “யுத்தங்கள் ஏற்படும் போது நாம்தான் அவரது தோழர்கள். யுத்தப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பொழுது அவரது குடும்பத்தினரும் அவரது மக்களும் ஆவார். இது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம், அது அல்லாது இது தூதருடைய உள்ளத்தில் எழுந்த எண்ணமாக இருந்தால், நமக்கும் சலுகை செய்யுமாறு நாம் அவரை வேண்டுவோம்” என்றனர் அன்ஸாரிகள்.

இதை அன்ஸாரிகளின் பிரதிநிதியான ஸஅத் இப்னு உபாதா (ரழி) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இதை கேட்ட நபி (ஸல்) “ஸஅதே! இந்த விடயத்தில் உங்கள் நிலை என்ன? என கேட்டப் பொழுது, அதற்கு ஸஅத் (ரழி) அவர்கள், நானும் அன்ஸாரிகளின் கருத்துடன் ஒத்து இருக்கிறேன்” என சொன்னார்கள். அதை கேட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களை கைதிகளை அடைத்து வைத்திருந்த இடத்தில் அன்ஸாரிகளை ஒன்று கூட்டினார்கள்.

அவர்களிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ஓ! அன்ஸாரிகளே! எனக்கெதிரான எண்ணங்கள் உங்கள் உள்ளங்களில் எழுந்துள்ளன என்பதை நான் அறிகிறேன் என்றவர்கள். உங்களை நான் தவறியவர்களாகக் கண்ட போது இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளை இருந்தப் பொழுது இறைவன் உங்களை செல்வந்தராக்கவில்லையா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டியவர்களாக இருந்த உங்களை அல்லாஹ் உங்கள் இதய்ங்களை ஒன்றுபடுத்தவில்லையா? என கேட்டதும், அங்கு குழுமி இருந்த அன்ஸாரிகள். நிச்சயமாக அவ்வாறே! அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அன்பும் கருணையும் மிக்கவர்கள் என்றார்கள்.

அதை தொடர்ந்து அல்லாஹுடைய தூதர் கண்ணியமிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளை பார்த்து, என்னை எதிர்த்து பேசமாட்டீர்களா? என கேட்டார்கள். அதைக் கேட்டதும் அன்ஸாரிகள் கலக்கமுற்றனர். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி பேச முடியும்? என்றார்கள்.

அதை கேட்ட நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீங்கள் விரும்பினால் உண்மையாகவே என்னைப் பார்த்து நீங்கள் இவ்வாறு கேட்கலாம்? அவமதிக்கப்பட்டவராக நீர் எங்களை வந்து சேர்ந்தீர், நாங்கள் உம்மை கவுரவித்தோம். துணையின்றி தனித்தவராக நீர் வந்தீர், நாங்கள் உமக்கு உதவி செய்தோம். வெளியேற்றப்பட்டவராக நீர் வந்தீர், நாம் உமக்கு அடைக்கலம் தந்தோம். நாம் உமக்கு ஆறுதல் தந்தோம் என நீங்கள் கேட்கலாம்.

மேலும் தொடர்ந்த அல்லாஹுடைய தூதர் அவர்கள், “ஓ! அன்ஸாரிகளே! நான் உங்களை உங்களது இஸ்லாத்தின் பொறுப்பில் விட்டுள்ள நிலையில், அல்லாஹ்வை அடிபணிய அவர்களது உள்ளங்களை இணங்கச் செய்யப் பயன்படுத்திய இவ்வுலகத்தின் அற்பப் பொருட்களுக்காக உங்கள் உள்ளங்கள் சஞ்சலப்படுகிறதா?

ஓ! அன்ஸாரிகளே! மக்கள் ஒட்டகங்களையும், செம்மறி ஆடுகளையும் அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல, நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எடுத்துச் செல்வதில் திருப்தி இல்லையா? அன்ஸார்கள் ஒரு வழியிலும், மற்றவர்கள் வேறு ஒரு வழியிலும் சென்றால், உங்கள் நபியாகிய நான் அன்ஸாரிக்ள் செல்லும் வழியில்தான் செல்வேன். அன்ஸாரிகள் மீதும், அன்ஸாரிகள் மக்கள் மீதும், அவர்களது மக்களின் மக்கள் மீதும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக! என துஆச் செய்ததும், அங்கு கூடி இருந்த அன்ஸாரி ஸஹாபிகள் தம் தாடிகள் நனையும் வரை கண்ணீர் விட்டு அழுதார்கள். எங்களது பங்காகவும், எமது உடமையாகவும் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக் கொள்வதில் நம் முழு திருப்தி கொள்கிறோம் என்றார்கள். (ஆதாரம் இப்னு இஸ்ஹாக்)

சுப்ஹானல்லாஹ்..எப்படிப்பட்ட சூழ்நிலையை நபியவர்கள் எளிதில் சுமுகமாக்கிவிட்டார்கள்!.. இந்த ஹதீஸைப் படித்தவுடன் என் கண்களும் பனித்து விட்டன... இம்மையை விட மறுமையில் அதிக நன்மை கிடைக்க வேண்டும் என் நாம் விரும்பினாலும் நாம் துஆ செய்யும்போது இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்விற்காக சேர்த்துத்தானே கேட்கிறோம்... ஆனால் அந்த அருமை அன்சாரிகள் மறுமையில் கிடைக்கும் நன்மை ஒன்றிற்காக நபியவர்கள் சொன்ன ஒரே காரணத்தை முழுமனதுடன்  ஏற்றுகொண்டார்கள்!... அவர்கள் கேட்டதோ இம்மைப் பொருட்களில் சலுகை.... ஆனால் கிடைக்கப்பெற்றதோ ஈடிணையில்லா மறுமையில் நற்பேறு... அவர்களை நினைத்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.;)

கைகளில் எந்த வித உடைமையுமின்றி ஹிஜ்ரத் செய்த மக்கா வாசிகளுக்கு தாமாக மனமுவந்து இருக்க இடமும் உடுக்க உடையும் உண்ண உணவும் தந்து பேருதவி செய்தவர்கள் மதீனாவாசிகள்.

உலக வாழ்க்கைக்காக ஹராமான பொருட்களைகூட ஹலாலாக்க நினைக்கும் மக்கள் மத்தியில் ஹலாலான பொருட்களைக்கூட அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காக விட்டுக் கொடுத்த அன்ஸாரிகள் மிக மிக சிறப்புகுரியவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் பாலிக்கட்டும்.

இன்றைய உலகில் ஒருவருக்கு நாம் சிறு உதவி செய்தாலும் அதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவர் மூலமாக மூன்றாவது நபரிடமிருந்தோ பிரதிபலன் எதிர்பார்ப்பது நம் அனைவர் மத்தியிலும் இயற்கையானது. அதையே கொஞ்சம் மாற்றி அந்த மூன்றாவது நபராக நாம் இறைவனையும் அவனிடமிருந்து நமக்கு கிடைக்கவிருக்கும் நன்மையையும் பிரதிபலனாக எதிர்பார்ப்போமாக! மதீனத்து அன்சாரிகளைப் போல் இஸ்லாத்திற்காக எதையும் துறக்கும் மனதை நமக்கு இறைவன் தருவானாக! ஆமீன்!

ஸஹீஹ் புகாரியில் : 3778, 3147