Sunday, December 23, 2012

கேள்விகள் ஆயிரம்...பதில் ஒன்றே..

பொதுவாக கண்டனத்திற்குரிய விஷயங்கள் நடைபெறும்போது அதை எதிர்த்து பலர் பதிவுகள் போடும்போதும் என்னுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் அவர்களது பதிவில் பின்னுட்டமாகவே தெரிவிக்கும் பழக்கம் இருந்தது. உதாரணமாக முஹம்மது நபி சம்பந்தப்பட்ட படம் வெளிவந்தபோது கூட என்னுடைய கோபமும் ஆத்திரமும் என் தனிப்பட்ட துஆவிலேயே வெளிப்படுத்தினேன். சமீபத்திய டெல்லி விஷயம் கேள்விப்பட்டு என் கோபத்தையும் ஆறாமையையும் மட்டுமல்ல என் அழுகையையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.


4069. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.
(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு - ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" என்னும் (திருக்குர்ஆன் 03: 128-வது) வசனத்தை இறக்கியருளினான்.
Volume :4 Book :64


17:11. மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். 
 
கடுங்கோபத்திலும் விரக்தியிலும் இறைவனிடம் இறைஞ்சினாலும்  மேற்கண்ட ஹதீஸை நினைவில் வைத்தே துஆ செய்ய முயல்கிறேன்.


பெண்கள் மென்மையானவர்கள் எனத் தெரிந்தும் ஏன் இப்படி இக்கயவர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடிகிறது? அன்னியப் பெண்களை மட்டுமின்றி தாய், சகோதரி, உறவுக்காரப் பெண்கள், பிள்ளைகள் ஸ்தானத்திலுள்ள மாணவர்களிடமும், சக   ஊழியர்களிடமும் என்று தொடங்கிய உங்களது கயமை இந்நாட்களில் பெற்ற மகளிடமே வந்து சேர்ந்துவிட்டதே.... பிறந்து ஆறு மாதமேயான குழந்தைகளும் உங்களின் காமவெறியிலிருந்து தப்பிக்கவில்லையே....ஏன் ..... பெண்கள் எந்த அளவிற்கு மென்மையானவர்களொ நீங்கள் அந்த அளவிற்கு மோசமானவர்களா? வெளியிடங்களில் தான் சந்தித்த, தன்னிடம் அவமரியாதைக்குரிய முறையில் நடந்து கொண்ட ஆண்களைப் பற்றித தங்களது சகோதரர்களிடம் தந்தைகளிடமும் வந்து அழுகையினூடே  பகிரும்போது ஒரு வித ஆறுதல் கிடைத்த காலங்கள் போய் வீட்டிலேயே அந்த கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ஏன்?

இவ்வுலகை உங்களைப் போன்ற எல்லைக்குட்பட்ட உணர்வுகளுடன் உங்களைப் போன்ற எல்லைக்குட்பட்ட மகிழ்ச்சியுடன் ரசிக்க நினைப்பது ஒரு பெரும்தவறா? வெளியில் செல்ல வேண்டுமென்றாலே      ஏன் பெண்களுக்கு அச்சத்தையும் தவிப்பையும் தர்மசங்கடங்களையும் உருவாக்குகிறீர்கள்?  ஏன் பெண்களை  போகப்பொருளாகவே பார்க்கிறீர்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆரம்பகாலங்களில் பெண்களை அடிமைப்படுத்திய உங்கள் மூட முன்னோர்களையே காரணம் சொல்லப்போகிறீர்கள்? அவர்களைப் போல நீங்களும் அறிவீனர்கள் தானா? சுய அறிவைப் பயன்படுத்தி முன்னேறமாட்டீர்களா? உலகை முன்னேற்றமாட்டீர்களா? உங்கள் கேவலமான தாழ்ந்த எண்ணங்களுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு பெண்களின் உடைகளையே காரணம் சொல்லப்பொகிறீர்கள்?  சாதாரணமாக உங்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அப்பக்கம் ஒரு பெண் வந்தால் உங்கள் பேச்சு தடைபடுவது ஏன்? அரைகுறை ஆடை தான் காரணம் என்கிறீர்களா .... சாதாரணமான சுடிதார் உடையணிந்து வரும் பெண்களையும் உங்கள் கேவலமான பார்வையால் துளைத்து கூனிக்குறுக வைக்கிறீர்களே..... விபரமறியா விளையாட்டுக் குணமுள்ள சின்னஞ்சிறுமிகளையும் விடுவதில்லையே... ஏன்?

உங்களது இக்கீழ்த்தரமான  செயல்களுக்குப் பயந்து எத்தனைஎத்தனை பெண்கள்  தங்களது அத்தியாவசியப் படிப்புகளைக்  கூடத் தவிர்த்து வீட்டில் அடைந்துகிடக்கின்றனர்? அவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக மிகவும் சமீபகாலமாகத்தானே சிறிது துணிச்சலோடு மேற்படிப்புகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்?! இந்த மாதிரி கொடூரமான ஒவ்வொரு சம்பவங்களும் எத்தனையெத்தனை பெண்களின் படிப்புகள் அவர்களது பெற்றோர்களால் பாதியில் நிறுத்தப்பட காரணமாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இரவில் தனியாக வரப் பயந்துதானே ஒரு ஆண் துணையுடன் வந்திருக்கிறாள் அப்பெண்... அது நண்பராக இராமல் உறவினராக இருந்திருந்தாலும் அவருக்கும் இதே கதிதானே நிகழ்ந்திருக்கும்? அவள் செய்த குற்றம் தானென்ன? பெண்ணாகப் பிறந்ததா? அவர் சினிமாவுக்குச் சென்றதுதான் குற்றமா? அப்படியே வைத்துக்கொள்வோம்.... வேறொரு நியாயமான காரணமாகயிருந்து இதே இரவுநேரப் பயணம் மேற்கொள்ளத தகுந்த சுழல் உள்ளதா இவ்வுலகில்? இறைவனுக்கு அடுத்தபடியாக இக்கால மக்களின் நம்பிக்கையைச் சம்பாதித்த மருத்துவத்துறையில் சேவையாற்ற வரவிருந்த ஒரு பெண்ணை இப்படி அலங்கோலப்படுத்திவிட்டீர்களே???இது போல் கொடுமைகளைச் சந்தித்த கற்பழிக்கப்பட்ட பெண்ணை இதுவரை பார்த்ததேயில்லை என சப்தார்ஜங் மருத்துவமனையின் மருத்துவர்களே வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்களே...  ஈரம் என்பதை கண்ணில் கூட காணாதவர்களா நீங்கள்?  அன்னியப் பெண்களிடம் உங்கள் கண்ணியத்தைக் காட்டமுடியாத நீங்கள் உங்கள் தாய், சகோதரிகளிடம் பந்த பாசத்துடன் நடந்துகொள்வீர்கள் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்?? உங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் அவமானத்தை உண்டாகிய நீங்கள் உயிருடன் இருந்து சாதிக்கப்போவது தான் என்ன????

அய்யா, கனவான்களே..... மரணதண்டனையை எதிர்ப்போம் எனும் உங்கள் கொள்கைகளைச் சிறிது ஓரங்கட்டிவைத்துவிட்டு இக்கொடுற மிருகங்களைத் தயவுசெய்து தூக்கிலிட்டு மனிதகுலத்திற்குப பெருமை சேருங்கள்.

அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! 5:45

வரும் மூன்று காரணங்களால், பழிக்குப்பழி வாங்குவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதனை ஒரு வன்முறை மதமாக கருதுவது  ஆதாரமற்றதாகிறது.

1. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது. அவர்களுடைய கோபம் மட்டுப்படுகிறது. இதனால் கட்டுப்படுத்திய கோபம் ஒருனாள் வெடித்துச் சிதறி இன்னும் அதிகமான இழப்பிலிருந்து பாதுகாக்கிறது.
2. தவறு செய்பவர்களுக்கு ஒரு படிப்பினை கிடைக்கும்
3. மக்களைப பாவம் செய்வதிலிருந்தும் தடுக்கிறது.

இத்தகைய சம்பவம் இந்தியாவில் நடந்ததால் இந்தியர்கள் மட்டுமே கற்பழிப்புக் குற்றத்தை அலட்சியம் செய்கிறார்கள் என்றில்லை. உலகளவில் அனைத்து நாட்டின் அரசாங்கங்களும் இவ்விஷயத்தில் எந்த வித கடுமையான சட்டதிருத்தங்களுமின்றி  தான் இருக்கின்றன. சமீபத்தில் கருச்சிதைவு தடைசெய்யப்பெற்ற அயர்லாந்தில் இந்தியப் பெண்  மருத்துவர்  ஒருவரது கருவே அவருக்கு எமனாகி அவரது உயிரைப் பறித்துவிட இப்பொழுது சட்டத்தை மறுபரிசீலனை செய்து, தவிர்க்கமுடியாத சமயங்களில் கருச்சிதைவு செய்யப்படலாம் எனு சட்டம் கொண்டுவர இருக்கின்றனர். இது நல்ல விஷயம்தானே என்கிறீர்களா?  ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... 14 வயது சிறுமி ஒருவர் அந்நாட்டில் சில நாட்கள் முன் கற்பழிக்கப்பட, அவர் கருவுற்றிருக்கிறார். அச்சிறுமியோ கருச்சிதைவைக் கோரி வழக்குத் தொடுக்க  கருச்சிதைவு அவருக்கு மறுக்கப்பட்டது. இப்பொழுது செய்த மறுபரிசீலனை இச்சிறுமியின் வழக்கின்போதே செய்திருந்தால் இந்நேரம் அம்மருத்துவர் உயிர் பிழைத்திருப்பார். ஆக கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்  செய்த அயர்லாந்தைப் போல் இந்தியாவும் ஆகிவிடாமலிருக்க இப்பொழுதே சட்டதிருத்தம் கொண்டுவரப்பட  வேண்டும்.. கற்பழிப்பு குற்றத்திற்கு மரணதண்டனையைக் கட்டாயச்  சட்டமாக்க வேண்டும். குற்றவாளி எத்தனை மேல்முறையீடு செய்தாலும் மரணம் நிச்சயம் எனும் சூழல் வேண்டும்.

சட்டம் கொண்டுவந்தால் நாளையே இத்தகைய குற்றங்கள் ஒழிந்துவிடுமா... இல்லைதான்.... சில நாட்கள் இல்லையென்றாலும் சிலவருடங்க்களிலாவது பெண்கள் நிம்மதி பெருமுச்சு விட  முடியும். இதுவரை பெண்கள் பட்ட துயரங்கள் போதும் ... இனிவரும் சந்ததியினராவது இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பாக்கியம் பெறட்டுமே...

பஸ்களில் பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் பஸ்ஸினுள்ளே கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இச்சம்பவத்தில்  உபயோகப்படுத்தப்பட்ட பஸ் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனமாகும். பொதுமக்களை ஏற்றிக்கொள்ள அனுமதி கிடையாது. இந்த சம்பவத்தைப் பார்த்தால் அந்த டிரைவர் உள்பட மற்றவர்கள் அவ்வாகனத்தில் வரும் குழந்தைகள் வாழ்க்கையிலும்  பாதிப்பு ஏற்படுத்தியிருப்பார்களொ என்ற அச்சம் வருகிறது. அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என மனதார வேண்டுகிறேன்..

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களே,, பெண்களை ஆபாசமாகக் காட்டுவதை விடுத்து  அழகாகக் காட்டுவதில்  எந்தத் தவறுமில்லை.. இதன்  மூலமே நீங்கள் சம்பாதித்த புகழ் மக்கள் மனதிலும் பொருள் உங்கள் கைகளிலும் நிலைத்து நிற்கும் என்பதனை மறக்காதீர்கள்.



சகோதரர்களே... தாய், மகள், மனைவி, சகோதரி எனும் நிலைகளைக் கடக்கும் பெண்கள் அந்ததந்த நிலைகளுகேற்ப அவர்களது கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..   ஆனால்   தந்தையாக நீங்கள் உங்கள் மகள்களுக்கு தங்க நகைச் சேர்க்கவில்லையென்றாலும் பரவாயில்லை... சகோதரனாக நிங்கள் தாய்மாமன் முறை சீர் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை... மகனாக உங்கள் தாய்க்குச் சேவை செய்யாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்தாலும் பரவாயில்லை.... கணவனாக உங்கள் மனைவிக்கு மூன்றவேளை உணவு,உடை தந்து சீராட்டவில்லையென்றாலும் பரவாயில்லை.... இவ்வனைத்து நிலைகளிலும் ஒரு நல்ல நண்பனாக மட்டுமிருந்தாலே போதும்... பெண்களது சுகதுக்கங்களில் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறினாலும் போதும்.... அன்னியப்பெண்களைப் பார்க்க நேர்ந்தால் மனதார இறைவனிடம் பாதுகாவல் தேடுங்கள் (அவள் காட்டுகிறாள்... நான் பார்க்கிறேன் என்பவரா நீங்கள்? அவள் நரகத்திற்குச் சென்றால் நீங்களும் துணை செல்லத் தயாரா?). பெண்களின் சதையைப் பாராமல், அவர்களும் உங்களைப் போன்றே உணர்வுகளும் ஏக்கங்களும் கனவுகளும் கொண்டவர்கள்  எனும் அடிப்படையை மனதில் பதியுங்கள் போதும்.

ஆண்களே... வெளியே தனியாகச் செல்லுவதற்கு பெண்களுக்கு அசாத்திய மனதைரியம் தேவை  எனும் சூழல் இருந்தால் அது ஆண் இனத்திற்கே அவமானமில்லையா? உங்களோடு சேர்ந்து உலகை முன்னேற்ற பெண்கள் தயாராக இருக்கிறார்கள். உங்களோடு கருத்து வேறுபாடின்றி உங்களுக்குத் தெரிந்த அதே உலக அறிவோடு  உங்களுக்கிருக்கும் அதே உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும்  நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகள், திருட்டு, கொலை, ஊழல், வரதட்சணை, வன்முறை,  சட்டமீறல் ஆகிய அனைத்து குற்றங்களையும் எதிர்த்து போரிட தயாராயிருக்கிறார்கள். நீங்கள் தயாரா?


(இந்தப் பதிவு பெண்களைத்  தமது மனசாட்சியின்படி பெருமைப்படுத்தும்  ஆண்களுக்கு அல்ல)

14 comments:

ஆமினா said...

சரியான கோணத்தில் சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லிட்டீங்க பானு!!!

ஒவ்வொரு கேள்வியும் சிந்திக்க வச்சது...

ஜஸக்கல்லாஹ் ஹைர்

Unknown said...

மிகவும் அழகான முறையிலும், இஸ்லாத்தின் முறையிலும் சொல்லியுள்ளீர்கள், இவர்கள்தான் குற்றவாளி என்று தெரிந்தாலும் இந்த அரசாங்கம் இன்னும் ஏன் தாமத படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை தூக்கு தண்டனையை.
இவ்வாறு தாமத படுத்துவது இது முதல் முறையில்லை, இதே டில்லியில் ஒருத்தன் சிறார்களை பாலியல் கொடுமை படுத்தி அவன் வாசித்த வீட்டிலும், அதே தெருக்களிலும் புதைத்தான் அவனையே இந்த அரசாங்கம், பைத்தியம் என்று சொல்லி இன்று அவன் வைத்திய சாலையில் உள்ளான்??????????

இந்த கேடுகெட்ட அரசாங்கம் இவர்களை மட்டும் என்ன தூக்கிலிடவா போகிறது?

suvanappiriyan said...

பெண் என்பதால் மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட இடுகை. சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை கொடுப்பதின் மூலமே இது போன்ற அவலங்களை தடுக்க முடியும்.

Umm Omar said...

//அய்யா, கனவான்களே..... மரணதண்டனையை எதிர்ப்போம் எனும் உங்கள் கொள்கைகளைச் சிறிது ஓரங்கட்டிவைத்துவிட்டு இக்கொடுற மிருகங்களைத் தயவுசெய்து தூக்கிலிட்டு மனிதகுலத்திற்குப பெருமை சேருங்கள்.

அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! 5:45

வரும் மூன்று காரணங்களால், பழிக்குப்பழி வாங்குவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதனை ஒரு வன்முறை மதமாக கருதுவது ஆதாரமற்றதாகிறது. //

சரியா சொல்லியிருக்கீங்க சகோ. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்பாங்க. அது போலத்தான் இங்கேயும்.... ஆதிவாசிப்பெண்களோ, பிற்படுத்தப்பட்ட (!!) வகுப்பைச் சேர்ந்த பெண்களோ சித்திரவதை செய்யப்பட்டால் அது பிரச்சினையில்லை.... ஆனால் இப்போது மட்டும் பொதுவில் வைத்து தூக்கு போடச்சொல்லி கேட்கின்றனர். மாஷா அல்லாஹ் மிக மிகத் தேவையான பதிவு... தகுந்த நேரத்தில்... மிக்க மகிழ்ச்சி சகோ. :)

Unknown said...

ஒவ்வொரு கேள்வியும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஜஸக்கல்லாஹ் ஹைர்

ஆத்மா said...

நியாயமான ஆதங்கம்
நியாயமான கேள்விகள்
பொருத்தமான அல்குரான் வசங்கள் மற்றும் ஹதீஸ்கள்.

சிந்திக்கத் தூண்டும் பதிவு

enrenrum16 said...

@ ஆமினா/சரியான கோணத்தில் சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லிட்டீங்க / எந்த பிரச்சினையானாலும் அதைப் பற்றி மட்டும் பார்க்காமல் அதன் காரணத்தையும் பார்க்கலாமேன்ற எண்ணத்தில் விளைந்ததுதான் இப்பதிவு.

enrenrum16 said...

@ஹாஜா

/இந்த கேடுகெட்ட அரசாங்கம் இவர்களை மட்டும் என்ன தூக்கிலிடவா போகிறது?// அங்கங்கு நடைபெறும் போராட்டங்களும் முற்றுகைகளும் இதை நடைமுறைத்தும் என நம்புவோம்.

enrenrum16 said...

@ சகோ சுவனப்பிரியன்

/பெண் என்பதால் மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட இடுகை// இது என்னுடைய எண்ணம் மட்டுமல்ல.... பதிவில் கூறப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் அதனால் வாழ்வின் நிம்மதியையே தொலைத்த எத்தனையோ பெண்களின் வேதனையான எண்ண ஓட்டமும் இதுதான். கருத்துக்கு நன்றி சகோ.

enrenrum16 said...

/ஆதிவாசிப்பெண்களோ, பிற்படுத்தப்பட்ட (!!) வகுப்பைச் சேர்ந்த பெண்களோ சித்திரவதை செய்யப்பட்டால் அது பிரச்சினையில்லை.... // நீதி என்பது எல்லாருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். அது ப்ரதமரின் குடும்பத்தினராக இருந்தாலும் சரி... ப்ளாட்பாரத்தில் வாழ்பவரானாலும் சரி... அதுவே நேர்மையான ஆட்சியாகும். கருத்திற்கு நன்றி அன்னு.

enrenrum16 said...

கருத்திற்கு நன்றி ரினாஷ்.. வ இய்யாக :)

enrenrum16 said...

@இம்ரான்

அனைத்து வித பிரச்சினைகளுக்கும் நமக்கு குர் ஆனிலும் ஹதீஸிலும் தீர்வுகள் கிடைக்க அதைச் செயல்படுத்துவோரில்லாததைக் காண்பதில் உள்ள வருத்தத்தைத்தான் கேள்விகளாக வெளிப்படுத்தினேன். கருத்திற்கு நன்றி.

சசிகலா said...

மரண தண்டனை கொடுக்க வேண்டும். அதுவும் விசாரணையின்றி எந்த மதமும் பெண்ணை இழிவு படுத்த சொல்லவில்லையே பின ஏன் இப்படியும் மனிதர்கள் ?

enrenrum16 said...

//எந்த மதமும் பெண்ணை இழிவு படுத்த சொல்லவில்லையே பின ஏன் இப்படியும் மனிதர்கள் ?// கரக்ட்டா சொல்லிட்டிங்க சசி... ஆனா இஸ்லாத்தில் மட்டுமே அதற்கு வன்மையான தண்டனைகள் சொல்லப்பட்டிருக்கு... அதை செயல்படுத்தினால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பது பெரும்பான்மையோரின் வாதம், அனைத்து மதத்தினர் உள்பட.