Friday, March 8, 2013

அன்று 3... இன்று 30

உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் ஒவ்வொரு வித இழப்பு,வருத்தம் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும்.... அப்படி ஒருவருக்கு இல்லையெனில் ஒன்று அவர் கடக்க வேண்டிய பாதை இன்னும் நிறைய இருக்கிறது அல்லது இறைவன் அவருக்கு விதித்தவைகளை அவர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என அர்த்தம் கொள்ளலாம். பொதுவாக மனிதர்களின் எந்த சொத்துக்களை அவர்கள் இழந்தாலும் சொந்த உறவுகளை இழந்தால் பிறர் கூறும் ஆறுதல்களை விட காலமே சிறந்த மருத்தாக அமையும். (இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக!)இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் இழப்புகளை ஓரளவு நாம் ஏற்றுக்கொண்டாலும் மனிதர்களின் முட்டாள்தனத்தினால் ஏற்படும் இழப்புகளை மனம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் ஆத்திரப்படுவதும் இயல்பே. பலர் அந்த இழப்பிலேயே முடங்கி வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லாமல் நடைப்பிணமாக ஆகிவிடுகிறவர்களும் உண்டு. தமக்கேற்பட்ட இழப்புகளை முதலீடாகக் கொண்டு வாழ்வில் முன்னேறியவர்களுமுண்டு.



சுனாமிக்குப் பிறகு நாகை ....


கடந்த டிசம்பர் 26 2004 உலகை உலுக்கியெடுத்த சுனாமி பேரழிவை யாரும் மறக்க முடியாது. கடல் அலையோசையைச் சங்கீதமாக மட்டுமே அறிந்திருந்த நம் மக்களுக்கு அதன் மறுபக்கத்தை உணர வைத்த அத்தினத்தில் சொந்தங்களை, சொத்துக்களை இழந்தவர்கள் மெல்ல மெல்ல தமது இழப்பை உணர்ந்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் அதே சுனாமியில் தமது மூன்று குழந்தைகளையும், ஏழு உறவினர்களையும் ஒரு சேர பறிகொடுத்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கரிபீரன் - சூடாமணி தம்பதியினரை நாம் லேசில் மறந்துவிட முடியாது. (நாகை மாவட்டத்தில் மட்டும் 6000 பேர் உயிரிழந்தனர்)


“பாலும் நெய்யும் ஊட்டி வளர்த்த குழந்தைகளை கல்லும் முள்ளும் குத்திக்கிழித்திருப்பதைப் பார்க்கும் நிலை எந்தத்தாய்க்கும் வரக்கூடாது” என அந்த இழப்பைக் குறித்து பத்திரிக்கைகளுக்கு அவர் கொடுத்த பேட்டி அவருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ.. எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. (அப்ப கூழும் கஞ்சியும் ஊட்டியிருந்தா பரவாயில்லையான்னெல்லாம் குதர்க்கமா கேக்கக்கூடாது).


நீங்கா நினைவுகளாக...

 “அப்பா..என்னைக் காப்பாத்துப்பா... என்னை விட்டு போகாதப்பா” என்ற எனது ஐந்து வயது மகனை கடல் பேரலை என் பிடியிலிருந்தும் பிடுங்கிச் சென்றதை என் ஆயுள் வரை மறக்க முடியாது எனவும் ஒரு மரத்தின் மீதேறிய அவர் அலை ஓய்ந்த பிறகு தன் குழந்தைகளைத் தேடி பைத்தியம் போல் ஓடினேன் எனவும் அத்தந்தை கூறுவதிலிருந்தும்  தன் வாழ்க்கையை வேரோடு அறுத்துச் சென்ற அவ்வலையை ஒன்றும் செய்ய முடியாத அவரது இயலாமையால், குற்ற உணர்ச்சியால் இன்று வரை அவர் தவிப்பது நன்கு புலப்படும்.அன்று 12 வயது மகள் ரக்‌ஷன்யா, 9 வயது காருண்யா மற்றும் 5 வயது மகன் கிருபாசன் ஆகிய மூன்று குழந்தைகளைக் கண்முன்னே இழந்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்றவர்கள் இன்று முப்பது குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?? பிறரிடமிருந்து எந்த உதவியுமின்றி தமது நேரம், சுயசம்பாத்தியம் அனைத்தையும் அந்தக் குழந்தைகளுக்காகவே செலவிட்டு வாழ்வைக கழிக்கவும் மிகவும் பரந்த மனம் வேண்டும்.

சுனாமியில் குழந்தைகளைப் பறிகொடுத்த அச்சமயத்தில் அவரது மனைவி சூடாமணியின் கனவில் அவரது குழந்தைகள் ஆறுதல் கூறுவது போலவும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி கூறுவது போலவும் கண்டார். அதனைச் சிறிதும் யோசிக்காமல் செயல்படுத்தினர் இருவரும். அதே சுனாமியில் தங்களது தாயைப் பறிகொடுத்துத் தவித்த மூன்று குழந்தைகளை முறைப்படி தமது பாதுகாப்பில் கொண்டுவந்தனர். அவர்களது வாழ்விற்கு வெளிச்சம் கொண்டு வந்த அக்குழந்தைகளின் அன்பில் மேலும் சில குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்  வழியைக் கண்டனர்.


இல்லக் குழந்தைகளுடன்


தற்போது பல ஆதரவற்ற குழந்தைகளைத் தம்முடைய இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரித்து வருகின்றனர். மூன்று வேலையாட்களுடன் அவர்களுடைய படிப்பு, உடை, உணவு என அனைத்தையும் சமாளிக்கும் அளவில் அவர்களுடைய வருமானம் போதுமானதாயிருக்கிறது எனவும் தெரிவிக்கிறார்கள். 4 முதல்14 வயதிலான இக்குழந்தைகளில் சிலர் தம்மை அம்மா-அப்பா எனவும் அத்தை-மாமா (ஆண்டி-அங்கிள்) எனவும் விளிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இப்பொழுது இவர்களுக்குப் பிறந்த, ஆறு மற்றும் நான்கு வயது, இரு குழந்தைகளையும் மற்ற குழந்தைகளிடம் இருந்துப் வேறுபடுத்திப் பார்க்காமல் அதே அளவு பாசத்துடன் வளர்க்கிறார்கள்.


தமது குழந்தைகளுடன்
சுனாமிக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தம்மை நேரில் சந்தித்ததை மிகவும் பெருமையுடன் நினைவு கூறும் இவர்களைப் பல அமைப்புகள் தமது விழாக்களுக்கு முக்கிய விருந்தினர்களாக அழைத்து கவுரவப்படுத்துகிறார்கள். CNN - IBN மற்றும் ரிலையன்ஸ் இணைந்து வழங்கி வரும் ‘ரியல் ஹீரோஸ்’ எனும் விருதினை கடந்த வருடம் இத்தம்பதியினரின் சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டது. எனினும் இவ்விருதுகளுக்காவோ, பிறரின் பாராட்டுக்களுக்காகவோ தாம் இச்சேவையைச் செய்யவில்லை எனவும் தமது ஆத்மதிருப்திக்காகவே தம்மால் இயன்ற உதவிகளைப் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் தமக்கு இதுவரை உதவிய மனங்களை நன்றியுடன் நினைவு கூறும் இவர்கள் இன்னும் அதிக குழந்தைகளுக்கு இது போல் ஆதரவும் அளிப்பதற்காகப் புதிதாக ஒரு கட்டிடம் எழுப்பி வருகின்றனர். இவர்களது முயற்சிகள் வெற்றியடைய நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவிப்போம்.


7 comments:

Yasmin Riazdheen said...

மாஷா அல்லாஹ்.. அருமையான பகிர்வு...

ஒரு சிலர் தங்கள் வாழ்வில் ஏற்ப்படும் இழப்புகளை முன்னிறுத்தி தங்கள் வாழ்வையும் இழந்து விடுகின்றனர்.

ஆனால் இவர்கள் போல் ஒரு சிலர் அந்த இழப்புகளை வெற்றிக்கல்லாக மாற்றி தானும் வெற்றிக் கண்டு மற்றவர்களையும் வெற்றி காண வழி வகுக்கிறார்கள்..

உண்மையில் மிகவும் அற்புதமான பணி இவர்கள் செய்வது.. பகிர்ந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரன் சிஸ்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அற்புதமானதொரு பணியினைச் செய்து வரும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நல்லதொரு படைப்பு. பகிர்வுக்கு ந்ன்றிகள்.

இதே சுனாமி சோகத்தினைப்பற்றி நான் ஒரு சிறுகதையில் கொண்டுவந்துள்ளேன்.

அது நான் எழுதிய முதல் கதை.

பிரசுரம் ஆகி பரிசிபெற்ற கதையும் கூட

தலைப்பு: தாயுமானவள்

இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html

enrenrum16 said...

/ இழப்புகளை வெற்றிக்கல்லாக மாற்றி தானும் வெற்றிக் கண்டு மற்றவர்களையும் வெற்றி காண வழி வகுக்கிறார்கள்.. / மிகச் சரியாகச் சொன்னீங்க....கருத்திற்கு மிக்க நன்றி யாஸ்மின்.

enrenrum16 said...

முதல் கதைக்கே பரிசா... எனது பாராட்டுக்கள். விரைவில் படிக்கிறேன்.

கருத்திற்கு நன்றி சார்.

Akila said...

Nice post

மனோ சாமிநாதன் said...

அருமையான பகிர்வு!
நல்லனவற்றை செய்யும்போது மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயங்களைப்படித்தாலும் கேட்க நேர்ந்தாலும் கூட மனதுக்கு சொல்லொண்ணா நிறைவு ஏற்படுகின்றது!
இந்த அமைப்பின் விலாசம், ஈமெயில் அட்ரஸ் எழுத முடியுமா?

enrenrum16 said...

அகிலா, மனோ அக்கா

கண்டிப்பாக இந்த விபரங்கள் கிடைத்தால் உங்களோடு பகிர்கிறேன். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.