Thursday, January 22, 2015

தோல்விகளை யாரும் விரும்புவரா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு


இறையருளால் நாம் வழங்கப்பெற்றிருக்கும் அருட்கொடைகளை எண்ணியெண்ணி அவனுக்கே நன்றி  செலுத்துவதற்காகவும் அவனைத் தொழுவதற்காகவும் படைக்கப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். ஆனால், மனிதமனம் அவனது அளவற்ற அருட்கொடைகளை விட, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சோதனைகளையே நொடிக்கொருமுறை எண்ணி மருள்கிறது. நபிமார்களும் சஹாபாக்களும் கொடுக்கப்பட்ட சோதனைகளில் கடுகளவே நாம் கொடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் நன்கறிவோம். 


நயவஞ்சகர்களாலும் நிராகரிப்பவர்களாலும் நித்தம் நித்தம் சித்ரவதை செய்யப்பட்டு சோதிக்கப்பட்டவர்கள் நமது சஹாபாக்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேதனைகள் என்றால், நமது நபிக்கோ சஹாபாக்கள் பெற்ற வலிகள், வேதனைகள், அனைத்தையும் ஒரு சேர தன்னுள்ளே உணர்ந்தார்கள்.  அவர்கள் படும் சோதனைகளை அறிய வரும்போதெல்லாம் மனதால் சொல்லி மாளாத கவலை அடைந்தார்கள். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் தமதருமை நண்பர்களுக்கு அழகிய ஆறுதலையும் அன்புமிக்க இறைவனது உதவியைக் கையேந்தி கேட்கும் துஆக்களையும் தொழுகைகளையும் கனிவோடு பகர்ந்தார்கள். அவ்வேதனைகளுக்குப் பகரமாக, மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் வெகுமதிகளை ஆதரவு வைத்தார்கள்.


இந்த வேதனைகள் ஒரு பக்கம் என்றால், தனிப்பட்ட முறையில் நபியவர்கள் இறைநிராகரிப்பாளர்களால்அடைந்த வேதனையோ அதிகமதிகமாகும். தங்களது தெய்வங்களை வணங்குவதை விட்டும் விலகியதோடு மட்டுமின்றி மற்றவரையும் விலக்குகிறார் என்ற ஆத்திரம், நபியவர்களை உடலளவிலும்  மனதளவிலும் கொடுமைப்படுத்தத் தூண்டியது. நாட்கள் செல்லச்செல்ல கொடுமைகள் அதிக பலம்  கொண்டு நபியவர்களைப் பலமிழக்க செய்தன. அப்போதும் இறைவனிடமே பொறுப்பை  ஒப்படைத்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினான்.


உதாரணத்திற்கு #தாயிஃப் நகரமக்களின் கல்லடி சொல்லடி வாங்கிய நிலையில் நபி (ஸல்) கேட்ட  பிரார்த்தனையைக் கேட்டால் பாறாங்கல்லும் கரைந்து விடும். இறைவன் தரும் சோதனைகள், காலில்  ஒரு முள் குத்தினாலும் அதற்கீடாகப் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று முழுமனதுடன் சோதனைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பொருந்திய நபி ஸல் அவர்களே மனவேதனையில் கண்ணீர்  மல்க துஆ செய்திருக்கிறார்கள் எனில்  நபி ஸல் அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளுக்கு முன் நமக்கு வழங்கப்பட்டுள்ள சோதனைகள் தூசு அல்லவா?


“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். 
கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரியகருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன். 
நீ என்னை யாரிடம்  ஒப்படைக்கிறாய்? 
என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தைநீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? 
உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த  கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். 
எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான்  எதிர்பார்க்கிறேன். 
அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள்  அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. 
அத்தகைய உனது  தருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது  அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். 
அல்லாஹ்வே! நீயே  பொருத்தத்திற்குரியவன். 
நீ  பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.   
அல்லாஹ்வே!  பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.”

இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் அண்ணல் நபி ஸல் நிராகரிப்பாளர்களுக்காக, அவர்களுடையஅறியாமையை நினைத்து மனம் வருந்தினார்கள். அவர்களுக்காக துஆ செய்தார்கள். அவர்கள் நேர்வழி பெற வேண்டும் என்றும் மறுமையில் அவர்களும் சொர்க்கச்சோலையில் புக வேண்டும் என்று கவலைப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால், அல்லாஹ்வே நபியவர்களைக் கடிந்து கொள்ளும் அளவிற்கு  வேதனைப்பட்டார்கள்.


26:3. (நபியே!) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!

சிந்தித்துப் பார்ப்போம் சகோதர, சகோதரிகளே…. சோதனைகள் அனைத்தும் நம் ஈமானை சோதிக்கவேயன்றி நம்மீது திணிக்கப்படும் அநீதியல்ல!!


4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.

 

சுப்ஹானல்லாஹ்... அல்லாஹ்வின் உதவிகளின் போது மனமகிழ்ந்து நன்றி செலுத்தும் நாம், அவனது சோதனைகளின் போது, மனம் துவளாமல் ,வெற்றி பெற அவனிடமே உதவி கோருவோம் இன்ஷா அல்லாஹ். உதவி கேட்பவர்களின் கைகளை வெறுமனே திருப்பியனுப்ப வெட்கப்படுபவன் நமது அர்ரஹ்மான். 


நான் தொழுகிறேன்.. ஓதுகிறேன்.. தஹஜ்ஜத் தொழுகையைக் கடைபிடிக்கிறேன். இருப்பினும் சோதனைகள் குறைந்த பாடில்லையே… யாருக்கும் ஒரு தீங்கும் நான் நினைக்கவில்லையே…. என்னைத் தவிர எல்லோரும் சுகமாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். என் குடும்பத்தில் மட்டும் ஏன் இத்துணை சோதனைகள்… இவற்றிலிருந்து மீள இன்னும் நான் என்ன தான் செய்ய வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் சிந்தித்து கவலையுறும் நாம், அச்சோதனைகளுக்கு ஈடாக மறுமையில் அல்லாஹ் நன்மைகளை நமக்காக ஏற்படுத்தி வைத்திருப்பதை ஏனோ மறந்துவிடுகிறோம்..அஸ்தஃஃபிருல்லாஹ்.


நாம் மறந்து விடும் லிஸ்டில் முக்கியமான மற்றொன்று, கஷ்டங்களும் வேதனைகளும் மட்டுமல்ல சோதனைகள்…. மகிழ்ச்சியும் சுகங்களும் சோதனைகள் தாம். கஷ்டங்களின் போது பொறுமையுடன் அவனிடமே உதவி கேட்பவர்களாகவும் இன்பங்களின் போது அவனுக்கு மட்டுமே நன்றி செலுத்துபவர்களாகவும் இருப்பதே நமக்கு அவன் வைக்கும் பரீட்சையாகும். அதற்கேற்ற மதிப்பெண்களே மறுமையில் நமக்குக் கிடைக்கவிருக்கும். வேதனைகளின் போது ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று மன்றாடும் நாம், சந்தோஷங்களின் போது பலருக்கும் தராத இன்பங்களை எனக்கு மட்டும் ஏன் தந்திருக்கிறான் என சிந்திக்க மறக்கிறோம்; புகழை, நன்றியை அல்லாஹ்வுக்கு சாட்டிவிட தவறுகிறோம். இவ்விரு நிலைகளுமே தவறானவை. சோதனைகளின் போது மட்டுமல்ல.. இன்பங்களின் போதும் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.


சஹாபாக்கள் எந்த அளவிற்குத் தமது இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் காண்போம்.


புகாரி 5652. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் 
இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் 
வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலம்) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். 

...அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் 
நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11 

Volume :6 Book :75

அல்லாஹு அக்பர். எந்த உடல் பிரச்சினையானாலும் இந்த காலத்தில் நவீன மருத்துவ சேவைகளால் எளிதில் குணப்படுத்த முடியும். இருப்பினும் எனக்கு அது செய்யுது.. இப்படி பண்ணுது என்று எந்நேரமும் புலம்புவர்களே நம்மில் அநேகராக இருக்கிறோம். இறையருளால் இந்த பெண்மணி நபி ஸல் அவர்களுக்கு வழங்கிய பதிலில் நல்ல படிப்பினை பெறுவோம். அல்லாஹ்வின் உதவிகளின் போது மனமகிழ்ந்து நன்றி செலுத்தும் நாம், அவனது சோதனைகளின் போது, மனம் துவளாமல் ,வெற்றி பெற அவனிடமே பொறுமையாக உதவி கோருவோம் இன்ஷா அல்லாஹ். உதவி கேட்பவர்களின் கைகளை வெறுமனே திருப்பியனுப்ப வெட்கப்படுபவன் நமது அர்ரஹ்மான் என்பதை என்றும் மனதில் நிறுத்தியவர்களாக ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக. ஆமீன்.

hadees, quran verses : tamililquran.com
pictures: google

4 comments:

Unknown said...

பானு .. வெளியில் சொல்லாவிட்டாலும் பலர் மனத்தில் எழும் கேள்விக்கு ,மார்க்கரீதியாக அழகிய பதில்...ஜசகல்லாஹ் ஹைரன்

பானு said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் தாஹா சோஃபியா

Jaleela Kamal said...

பாதி தான் படித்து இருக்கேன் மீதியை பிறகு வந்து படிக்கிறேன். பிளாக் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா , நல்லது

பானு said...

ஆமா அக்கா... ஆரம்பித்துள்ளேன்.. எப்ப வேணா முடியலாம். ஹா ஹா