Thursday, February 18, 2016

முன்னெச்சரிக்கை (குட்டிக்கதை)

”ஏங்க... ஸ்கூல் பஸ் இன்னும் வரல.. ட்ரைவர் ஃபோன் நம்பர் தாங்க...நான் ஃபோன் செய்து கேட்கிறேன்.”

அலுவலகம் சென்றுவிட்டிருந்த கணவனிடம் ஃபோனில், கையில் குழந்தையுடனும் கால்களில் வலியுடனும், கேட்டாள்.

‘என்னது.. யார்னு தெரியாதவன் நம்பர் எல்லாம் மனைவியிடம் கொடுக்கிறதா.. அவசியமில்லை... இந்த காலத்தில் எவனையும் நம்ப முடியாது. பெண்ணின் நம்பர்னு தெரிஞ்சுது.... அப்புறம் தேவையில்லாத ஃபோன்கால்களும் மெசேஜ்களும் அனுப்புவானுங்க. தேவையில்லாத டென்ஷன்...நாமளே ட்ரைவருக்கு ஃபோன் செய்து கேட்டு இவளுக்குத் தகவல் சொல்வோம்’ என எண்ணியவனாய்

“கொஞ்சம் வெய்ட் பண்ணு.. நானே கேட்டு சொல்றேன்”

“நீங்க ட்ரைவர்கிட்ட பேசிட்டு அப்புறம் எனக்குத் தகவல் சொல்ற வரை நான் இங்க நிக்கணுமா? நம்பரைத் தாங்க.. நான் பேசிக்கறேன்”

“நீ ஃபோன் பண்ணா பேலன்ஸ் குறையும்.. நானே ஆஃபீஸ் நம்பரில் இருந்து கேட்டு சொல்றேன்... ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ண முடியாதா உனக்கு?”

“ரொம்ப அறிவாளின்னு நினைப்பு..”

குரலைச் சிறிது உயர்த்தினால் மனைவி கொஞ்சம் இறங்குவாள் என இவன் போட்ட கணக்குத் தோற்றாலும் கவலையை வெளிக்காட்டாமல் ட்ரைவருக்கு ஃபோன் செய்தான்.

ம்ஹூம்..ட்ரைவர் எடுக்கவில்லை.

‘ம்ம்.. என்ன பண்றது.. இதை அவளிடம் சொன்னால் அதுக்கும் கத்துவா.. பேசாம ஸ்கூலுக்கே ஃபோன் செய்து கேட்போம்’

ஸ்கூல் ரிசப்ஷனிஸ்ட் ஃபோனை எடுத்தாள் “குட் மார்னிங்... --------- ஸ்கூல்.. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ”

ட்ரைவர் இன்னும் வராததையும் ஃபோன் செய்தும் அவர் எடுக்காததையும் தெரிவித்து பதிலை எதிர்பார்த்தான். நல்ல வேளை.. ரிசப்ஷனிஸ்டின் கணவன் யாரென தெரியாதவர்களிடம் அவசியமிருந்தும் பேசக்கூடாது என்று கண்டிஷன் போடாததால் பொறுப்பான தெளிவான பதில் அவனுக்குக் கிடைத்தது.

Saturday, February 6, 2016

மீண்டும் மீண்டும் அதே பல்லவி

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர் வருமானவரி கட்டாமல் ஏமாற்றிய செய்தி காண நேர்ந்தது. இதுதான் நேரம் என்று ஷாகிருக்கு லெக்சர் கொடுத்தாச்சு.

நானும் ஒரு காலத்தில் அனைத்து கிரிக்கெட் டீம் மெம்பர்ஸ் பெயர்களும் இதோ இந்த விரல் நுனியில் தான் வைத்திருந்தேன்.. ஃபிக்சிங் என்ற பெயரை என்று கேள்விப்பட்டேனோ... அன்று உதறித்தள்ளிவிட்டேன். இன்று ஷாகிர், கிரிக்கெட், ஃபுட்பால் வீரர்களைக் கொண்டாடும்போது கடும் கோபம் வருகிறது. எவ்வளவு சொல்லியும் அவனது ஆர்வம் குறையவில்லை. அவர்களது விளையாட்டைக் காண்பதும் கற்றுக்கொள்வதும் தவறில்லை. அதற்காக... குறிப்பிட்ட வீரர்களுக்காக உற்சாகப்படுவதைக் கண்டால் பொறுக்க முடியவில்லை. 

“நீங்கள்லாம் இப்படி அளவுக்கதிகமாகக் கொண்டாடுவதால் தான் இவன் போன்ற ப்ளேயர்ஸ் ஃபேமஸ் ஆகிறார்கள். அவர்களுக்குக் காசும் கூடுகிறது. இவ்வளவு கூச்சல் போடுக்றீர்களே.. அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் புகழில் கிஞ்சித்து லாபமாவது உனக்குக் கிடைக்குமா? அவன் விளையாடுகிறான். அவனுக்குக் காசு கிடைக்கிறது. நீ ஏன் சந்தோஷப்படுகிறாய்? நீ யாரென்றாவது அவனுக்குத் தெரியுமா?

(சைக்கிள் கேப்பில்)  உன்னையும் என்னையும் பார்க்காமலே... உனக்காகவும், எனக்காகவும் அழுது துஆ கேட்ட நபியைப் பின்பற்று.. உன்னை யாரென்றே தெரியாத இவன் போன்றோரைப் பிரபலமாக்காதே.. 

அவனது விளையாட்டில் இருந்து டெக்னிக்ஸ் மட்டும் கற்றுக்கொள். “ என்று பலமுறை கூறியாகிவிட்டது. அந்த சமய்த்தில் சரி சரியென்பான். எல்லாம் குடிகாரன் பேச்சு ஆகிவிட்டது.



இன்று ஒரு பாயிண்ட் ஆதாரத்துடன் சொல்லியாகிவிட்டது. “நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் அவனுக்குக் கிடைத்த சொத்துகளில் கவர்ன்மெண்டுக்குக் கொடுக்க வேண்டிய இன்கம் டேக்ஸ் கட்டாமல் ஏமாற்றி இருக்கிறான். இவனைப் போன்ற ஏமாற்றுக்காரர்களையா உனக்குப் பிடிக்கிறது? அவன் ஒரு விளம்பரத்தில் வந்தால் கோடிக் கணக்கில் பணம் கேட்பான்.. ஏன் கேட்கிறான்? அவன் வந்தால் நீங்கள்லாம் வாய் பிளந்து அந்த விளம்பரத்தைப் பார்ப்பீர்கள்... எல்லாம் உங்களால் அவனுக்குக் கிடைத்த பணம்”

பதிலில்லை. கவர்ன்மெண்டை ஏமாற்றி விட்டானா? என்று மட்டும் கேட்டான். அதே நாளில் பூலோகம் என்ற படமும் பார்த்தோம்... ஏதாவது மாற்றம் வருமா?

ம்ம்/... என்ன சொல்லி என்ன கேட்டு என்ன பார்த்து என்ன பயன்... மீண்டும் நாளை நான் இதே பல்லவியைப் படிக்க வேண்டும்.  

http://www.gulf-times.com/story/477955/Neymar-fined-112-000-for-Brazil-tax-evasion